திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் புவனேஸ்வரன். 25 வயதான இவர், திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து புவனேஸ்வரன் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து ஆபாசமாக செல்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதனை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். அப்போது திருப்பூரை சேர்ந்த நண்பரான தமிழரசன் என்பவர் புவனேஸ்வரன் சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்து வீடியோ, புகைப்படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டார்.
இதையடுத்து அந்த வீடியோ, புகைப்படங்களை சிறுமியின் தந்தையான சுந்தர்ராஜன் என்பவருக்கு அனுப்பியதுடன், ரூ.15ஆயிரம் பணம் வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் இது குறித்து அவினாசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதற்கு பிறகும் சிறுமியுடனான பழக்கத்தை புவனேஸ்வரன் கைவிடவில்லை. மீண்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வீடியோ, புகைப்படங்களை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சுந்தர்ராஜன், புவனேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசனை அணுகியுள்ளார். புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு தமிழரசனும் ஒத்துக் கொண்டார்.
கூலிப்படையை ஏவி கொலை
இதைத்தொடர்ந்து தமிழரசன், புவனேஸ்வரனை கொலை செய்ய தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் புவனேஸ்வரனை தொடர்பு கொண்ட தமிழரசன், திருமுருகன்பூண்டி பகுதிக்கு வருமாறு அழைத்ததன் பேரில், புவனேஸ்வரன் அங்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்த புவனேஸ்வரனை, தமிழரசன் காரில் ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஏ.வி.பி. லே அவுட் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காரில் இருந்து புவனேஸ்வரன் இறங்கியதும், மறைந்திருந்த 10 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் புவனேஸ்வரனை வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி புவனேஸ்வரனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புவனேஸ்வரனை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சுந்தர்ராஜன் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தனது மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்ததாக சுந்தர்ராஜன் தெரிவித்தார். இதனிடையே தலைமறைவான தமிழரசன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.