கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள100 வார்டுகளில் திமுக கூட்டணி 96வார்டுகளை கைப்பற்றியது. பின்னர் மேயர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.


செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வந்தவர் என்பன போன்ற கருத்துகள் அவருக்கு நேர்மறையான பிம்பத்தை தந்தன. மிக குறுகிய காலத்திலேயே அரசியல் உச்சம் பெற்று, அதே வேகத்தில் சரிவையும் சந்தித்துள்ளார் கல்பனா ஆனந்தகுமார். தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை விட, கட்சி தலைமையால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என்பதே உண்மை.


பதவியை பறிக்க காரணம்


முதல் முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதும், மேயர் பதவி கிடைத்த நிலையில் அரசியலில் அனுபவம் இல்லாமல் கல்பனா தடுமாறினார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக காட்டிக் கொண்ட அவர், மற்ற அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. திமுக கவுன்சிலர்களை மதிப்பதில்லை, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அனுப்பும் கோப்புகளை நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால் கல்பனாவின் சரிவிற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் செயல்பாடுகளே காரணமாக அமைந்தன. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிசன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதாலும், செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும் கல்பனா மீது திமுக தலைமை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கோவையில் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும் அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கல்பனாவின் மேயர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


சரிவை சந்திக்கும் மேயர்கள்


கடந்த 1996 ம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் மேயர் பதவி உருவாக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றார். அதன் பின்னர் அரசியலில் அவரால் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. இதற்கு அடுத்து 2001 ம் ஆண்டில் மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த மலரவன், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும் கட்சியில் பெரிதாக வளர முடியவில்லை. 2006 ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடாசலம் மேயராக பதவிக்கு வந்த பின்னர், அரசியலில் சரிவையே சந்தித்தார்.


2011 ம் ஆண்டில் கோவை மாநகராட்சி மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த செ..வேலுசாமி, கோவையில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தார். ஆனால் அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே 2014 ம் ஆண்டு அவரது மேயர பதவி பறிக்கப்பட்ட பின்னர், அதிமுகவில் ஒரங்கட்டப்பட்டார். இவருக்கு அடுத்து மேயரான கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்தே விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் தற்போது கல்பனா ஆனந்தகுமாரும் பதவிக்காலம் முடியும் முன்னரே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கோவை மாநகராட்சி மேயர் பதவி ராசியில்லாதக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் மேயர்கள் மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.