மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 7 ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி துவங்கியது. இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் இந்த ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண ரோஜாக்களை கொண்டு பல்வேறு அலங்கார சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 31 ஆயிரம் வண்ண ரோஜாக்களை கொண்டு 15 அடி உயர மர வீடு, 9000 ரோஜாக்களை கொண்டு படச்சுருள், 6,000 ரோஜாக்களை கொண்டு குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் சித்திரங்கள் மோட்டு பட்லு, 5000 ரோஜாக்களால் பியானோ உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 50 ஆயிரம் ரோஜாக்களை கொண்டு மஞ்சப்பை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல உதகை உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகளானதை கொண்டாடும் வகையில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட OOTY 200 உள்ளிட்ட அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட அலங்கார சித்திரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கான ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும் போது, “இரண்டு ஆண்டுகளாக குடும்பங்களுடன் வெளி சுற்றுலாவுக்கு எங்கும் செல்லாத நிலையில் நீலகிரியில் நடைபெறும் கோடை விழாக்கள் மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது. இங்குள்ள ரோஜா அலங்காரங்கள் பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் தருகிறது. குடும்பங்களுடன் வந்து பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி வருகின்ற 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதேபோல ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் 18ம் தேதி முதல் 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 25 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. கோடை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக படகு போட்டி ஊட்டி ஏரியில் வருகின்ற 19 ம் தேதி நடைபெற உள்ளது. கோடை விழாவினை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.