1. கோவையில் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு காரணமாக, அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுது போக்கு தளங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கோவை மாவட்ட நிர்வாகம் இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  2. கோவையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கின்றன. இருந்தாலும் தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

  3. கோவையில் இரண்டாவது வாரமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 748 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

  4. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் உலா வரும் புலியினை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 மாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது என அக்கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

  5. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 60 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. வயது மூப்பு காரணமாக 44 யானைகளும், மின்சாரம் தாக்கி 7 யானைகளும், நோய் தாக்கி 9 யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் 28 ஆண் யானைகள், 10 பெண் யானைகள், 3 மக்னா யானைகள், 19 குட்டிகள் அடங்கும்.

  6. கோவை மாவட்டத்தில் தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் புதிய தொழில் பூங்கா அமைப்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 3800 ஏக்கரில் அமைக்கப்படும் புதிய தொழில் பூங்காவினால் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  7. கோவை போத்தனூர் – பாலக்காடு இடையேயான இரயில்வே தண்டவாள பணிகளில் ஈடுபட்ட கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மணிக்குட்டன் என்ற மேற்பார்வையாளர் இரயில் மோதி உயிரிழந்தார். தண்டவாளத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, இரயில் சத்தம் கேட்டு மற்றொரு தண்டவாளத்திற்கு மாறிய நிலையில், அப்பாதையில் வந்த இரயில் மோதி மணிக்குட்டன் உயிரிழந்தார்.

  8. கோவை மாவட்டம் பேரூர் தென்கரை பேரூராட்சிக்கு சென்னனூர் கிராமத்தில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான 9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.

  9. ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டார பகுதிகளான பொலவக்காளிபாளையம், சுங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு சேதமடைந்தது.

  10. கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்மில் இன்று அதிகாலையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.