கோவை மாவட்டம் வால்பாறை அருகே சுமார் 20 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில், தேயிலை தோட்டத் தொழில் முக்கிய வாழ்வாதரமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் வால்பாறை இருந்து வருவதால், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம். 


வால்பாறை மற்றும் மானம்பள்ளி வனச்சரகங்கள் அடர் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இப்பகுதிக்கு அருகில் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானை, சிறுத்தை, மான், புலி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தேயிலை தோட்டம், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் தென்படுகிறது. அண்மை காலமாக அப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் ரேசன் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தும் தொடர்ந்து நடந்து வருகிறது.




குறிப்பாக காட்டு யானைகள் அருகில் உள்ள கேரள வன பகுதியை விட்டு தமிழக வனப்பகுதி முடிஸ், சின்கோனா, நல்ல காத்து, நல்ல முடி, குரங்கு முடி, சோலையார் ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதனிடையே பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் பகுதியில் பத்தாம் நம்பர் காட்டுப் பகுதியில் ஒரே நேரத்தில் ஆறு குட்டிகளுடன் 20 காட்டு யானைகள் தேயிலை காட்டுப் பகுதியில் முகாமிட்டுள்ளது. காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் உலா வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண