தொழில் நகரமான கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை நம்பி 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறுந்தொழில் கூடங்கள் பெரிய நிறுவனங்களிடம் இருந்து ‘ஜாப் ஆர்டர்’ முறையில் ஆணைகளை பெற்று உற்பத்தி செய்து தருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பீக் ஹவர்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் குறைப்பு செய்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இது வெறும் கண் துடைப்பு. குறுந்தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை.




தொழில் நிறுவனங்களுக்கு காலை மற்றும் மாலையில் 6 முதல் 10 மணி வரை என நாள்தோறும் 8 மணி நேரத்திற்கு பீக் ஹவர் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இது 100 சதவீதம் ஒத்துவராது. இதில் 25 சதவீத கூடுதல் கட்டணத்தில் 10 சதவீதம் மட்டுமே அரசு குறைத்துள்ளது. பீக் ஹவர் கட்டணத்தை நீக்க வேண்டும். 112 கிலோ வாட் வரையிலான நிலை கட்டணத்திற்கு 50 ரூபாய்க்குள் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். இதேபோல நிலை கட்டண உயர்வை ஏற்க முடியாது. இதன் காரணமாக 50, 60 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த சுமையை குறுந்தொழில் முனைவோர்களால் தாங்க முடியாது. 


கொரோனா பெருந்தொற்று, மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜாப் ஆர்டர்கள் குறைந்து வருகிறது. சிறு, குறு தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பம்புசெட் உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவையில் தொழில் நலிவடைந்துள்ளது. குஜராத் போன்ற மற்ற மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை உள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையை ஏற்ற முடியாத நிலை உள்ளது. இந்த சூழலில் மின் கட்டண உயர்வு மேலும் பாதிப்புகளை உருவாக்கும். குறுந்தொழில்கள் அழியும் நிலை ஏற்படும்.


மின் கட்டண உயர்வு தொடர்பாக அரசு மீண்டும் மறுபரிசீலணை செய்ய வேண்டும். பீக் ஹவர் கட்டணத்தை முழுமையாக கைவிட வேண்டும். தொழில் முனைவோருக்கு முன்பு இருந்தது போல 112 கிலோ வாட் வரை ஒரே கட்டணமாக நிலை கட்டணத்தை 50 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தொழில் துறையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண