பிரதமர் நரேந்திர மோடியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம் மற்றும் 73 குடும்பங்களுக்கு 73 நாட்டு மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தாலியை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.


காவிரி நீர்:


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருப்பது போல் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் வரும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பிரச்சனைகள் இல்லாமல் இரண்டு மாநில அமைச்சர்களும் பேசி தீர்த்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


நடைபயணம்:


முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "நல்ல போலீஸ்காரர்களை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும். தேள் கொட்டியது போல தான் இருக்கும். தரத்தை தாழ்த்தி நான் எப்போதும் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். இன்னொரு கட்சியை தாழ்த்தி தான் பாஜக முன்னேற வேண்டும் என்ற அவசியம் இல்லை.


எங்களுடைய உழைப்பில் இந்த கட்சி வளர வேண்டும். இதற்கு முன் யாரெல்லாம் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்து வசூல் செய்து உள்ளார்களோ, அவர்கள் அனைத்தையும் வசூலாக தான் பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் மந்திரிகளாக இருப்பதே வசூலிப்பதற்காகத்தான். அதனால் நாமும் நடைபயணம் மேற்கொண்டால் அதனையும் வசூல் என நினைத்துக் கொள்கிறார்கள்.




நேர்மைக்கு அர்த்தம் தெரியாது:


வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் நேர்மை என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. சில தலைவர்களுக்கு கள அரசியல் மாறிவிட்டது என்பதை புரிந்து கொள்வதற்கே இன்னும் 10 ஆண்டுகள் வேண்டும். என் மண் என் மக்கள் யாத்திரையில் பெருமளவு அனைத்து இடங்களிலும் பெண்கள், தாய்மார்கள், இளைஞர்களிடமிருந்து தான் ஆதரவு கிடைக்கிறது.


உதயநிதி நிகழ்ச்சிகளுக்காக நான்கு அமைச்சர்கள் அவர்கள் ஊரில் இருந்து வண்டிகளை திரட்டி கொண்டு மக்களை சேர்க்கிறார்கள். அப்படி இருந்தும் இருக்கைகள் காலியாக தான் உள்ளது. பொது நல விழாவிலும் கூட்டம் வரவில்லை என்றால், மக்கள் திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் நிராகரித்துள்ளார்கள். அதனுடைய பிதற்றலாக தான் சனாதன தர்மம் இந்து தர்மத்தை அழிப்போம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


குடும்ப அரசியல்:


அறிஞர் அண்ணா திராவிடக் கொள்கையில் குடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறிய மாமனிதர். கஷ்டப்பட்டு வந்து சுத்தமான அரசியலை கொடுக்க வேண்டும் என நினைத்தார். தமிழகத்தில் எத்தனை பேருக்கு அண்ணாதுரையின் குடும்பத்தினர் பெயர் தெரியும்? ஆனால் இன்றைக்கு வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் அவர்களது குடும்ப பெயரை போஸ்டர் அடித்து ஓட்டுகிறார்கள். அண்ணாதுரை எங்கே ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அங்கு நான் ஏற்றுக்கொள்கிறேன்.


எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காண்பித்து சென்று இருக்கிறார். கலைஞர் கருணாநிதியை நாங்கள் மரியாதையாக தான் பேசுவோம். பாஜக யாரையும் கடவுளாக பார்ப்பவர்கள் கிடையாது. எங்களை பொறுத்தவரை அனைவரும் மனிதர்கள் தான். அனைவரையும் கடவுளாக மாற்றி சரித்திரத்தை மாற்ற முடியாது. அண்ணாதுரையை நான் என்றும் தவறாக பேசியது இல்லை. சம்பவத்தில் நடந்ததை எடுத்துக் கூறினேன். சனாதன தர்மத்தை பற்றி பேசும்பொழுது உண்மையை பேசுங்கள்.


சி.வி.சண்முகம் பாடம் எடுக்க வேண்டாம்:


என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சிவி சண்முகம் ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். ஆறு மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார். காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது. எனவே நேர்மையை பற்றி சி.வி.சண்முகம் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் மந்திரியாக இருக்கும் பொழுது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும். அதற்குள் எல்லாம் நான் போகவில்லை. 


என்னை பொறுத்தவரை என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால், யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன். இது என்னுடைய தன்மான பிரச்சினை. கூட்டணி தேவைதான். ஆனால் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால் அப்படிப்பட்ட அவசியம் பாஜகவிற்கு கிடையாது.




பா.ஜ.க. தலைவணங்காது


பாஜக தனித்தன்மையாக 2026ல் பவருக்கு வரும். இன்னொரு கட்சியின் க்ளோனாகவோ, பி டீமாகவோ, சி டீமாகவோ வராது. எதையும் ஆட்டை போடுவதற்காக நான் வரவில்லை. சனாதான தர்மத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் நான். எனவே என் பேச்சு சூடாக தான் இருக்கும். யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவணங்காது.   தமிழ்நாடு முதலமைச்சருக்கு சனாதான தர்மத்தை பற்றி தெரியவில்லை என்றால் அது கேவலம்.


12ம் வகுப்பு புத்தகத்தில் சனாதனத்தை பற்றி விளக்கியுள்ளார்கள். கோவை குண்டுவெடிப்பை பொறுத்தவரை அலாவுதீனும் அற்புத விளக்கும் போல தோண்ட தோண்ட ஒவ்வொரு விஷயமாக வந்து கொண்டிருக்கிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடுத்த தாக்குதலை தடுத்துள்ளார்கள். ஆனால் இங்கு இருப்பவர்கள் அது புரிந்து கொள்ளாமல் ஓட்டு அரசியலுக்காக இந்தியாவின் இறையாண்மையை கேலிக் கூத்தாக்கியுள்ளார்கள். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக இருந்த ஒரு கட்சி திமுக. அப்படி இருக்க இன்றைக்கு திமுக கவுன்சிலர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்றால், அதைவிட ஒரு கேவலமான விஷயம் தமிழகத்திலேயே நடந்திருக்க முடியாது.


எதையாவது பேசுவதா?


தமிழகத்தில் மக்களையும் குறிப்பாக பெண்களையும் வஞ்சிக்கின்ற போக்கை திமுக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்பதை மகளிர் உரிமைத் தொகை மற்றும் ஒருமுறை எடுத்து காண்பித்துள்ளது. கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்று கூறுவதெல்லாம் என்ன ஒரு பேச்சு? மேடை இருக்கிறது மைக் இருக்கிறது என்று எதையும் பேசி விடக்கூடாது. என்னிடமும் அடித்து பேச ஆட்கள் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நேர்மையாக பேச வேண்டும். விஸ்வகர்மா திட்டத்தை பொருத்தவரை மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றாலும், அத்திட்டம் சிறப்பாக செயல்படும். என்னுடைய நேர்மை கொச்சைப்படுத்தினால் அவர்களைப் பற்றி தோண்ட ஆரம்பித்து விடுவேன், நான் தோண்டுவேன் என்பதும் தெரியும் எந்த அளவுக்கு தோண்டுவேன் என்பதும் தெரியும்” எனத் தெரிவித்தார்.