கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையில் முத்து என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கிஷோர் கே சுவாமி மீது ஒரு புகார் அளித்தார். அதில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது கிஷோர் கே சுவாமி என்பவரின் டிவிட்டர் பக்கத்தில் ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது இரு தரப்பினர் இடையேயான அமைதியை குலைக்கும் வகையில் இருந்ததாகவும், குற்ற நோக்கத்துடன் இரு தரப்பினர் இடையே பகைமை மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் பதிவிட்டு இருந்ததாகவும் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதனிடையே கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கிலும் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிஷோர் கே.சாமியை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் வருகின்ற 12 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். மேலும் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில், 2 மணி நேரம் கிஷோர் கே சாமியிடம் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். கிஷோர் கே.சாமி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


வலதுசாரி சிந்தனையாளரான கிஷோர் கே.சுவாமி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் பற்றி அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். கிஷோர் கே.சுவாமி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்து வருகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருவதாக அவர் மீது புகார்கள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு..ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார்.


இந்த நிலையில், அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து கிஷோர் கே சுவாமி வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண