கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் சுபகிருது ஆண்டுப் பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் பேசும் போது, ”தமிழ் நிகழ்வு என்ற அழைப்பு வரும் போது தமிழிசை அங்கே இருப்பேன். ஒரு ராமசாமி மட்டும் (பெரியார்) தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்யவில்லை. இங்கே உள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தமிழுக்கு தொண்டாற்றி உள்ளார். 


75 ஆண்டு சுதந்திர தினத்தை ஓராண்டுக்கு கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. இதன்மூலம் மாணவர்கள் சுதந்திர போராட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. எல்லா மடங்களுக்கும் செல்லும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அங்கு என்ன பழக்கங்கள் இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால் அங்கு நடந்த சம்பவங்களை மாற்றி எழுதுகின்றனர். என் மனதில் இருப்பது மக்கள் சேவை, ஆன்மீக சேவை மட்டுமே.




கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசு மடாலய அதிபதிகளை அழைத்து பேசும் போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது. நம்மால் முடிந்ததை ஆதீனங்களுக்கு செல்வமாக, தானமாக வழங்க வேண்டும். நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. பணமதிப்பிழப்பின் போது எந்த பிரச்னையும் தனக்கு வரவில்லை. மோடி எங்களுக்கு சொல்லவுமில்லை, எங்களிடம் கருப்பு பணமும் இல்லை.  மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும். ஆளுநர்களுக்கு ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், ஆளுநர்களும் சாமானிய மக்களில் ஒருவர் தான்” என அவர் தெரிவித்தார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஆதீனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மகளாக  இங்கு வந்துள்ளேன். இவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதாக வந்துள்ளேன். தமிழக அரசு ஆன்மீக குருக்களை அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்மீக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், அரசு இன்னும் பக்கபலமாக இருக்க வேண்டும். 




ஆளுநர்கள் என்றால் அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் தான். கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக ஆளுநர்களை  அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும், பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும். ஆளுநர்களுக்கு என  தனிப்பட்ட கருத்து என்று இருக்க முடியாது. சில நேரங்களில் நீதிமன்றங்களில் சில வழக்குகளுக்கு சொல்லப்படும் கருத்துக்களை எல்லா ஆளுநர்களுக்கும் பொருத்தி பார்க்க முடியாது. ஆளுநர்கள் எல்லாரும் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 


தமிழக பிரச்சினையை தான் பேசவில்லை. டீ சாப்பிட, மதிய, இரவு உணவு சாப்பிட கூப்பிட்டால் வர மாட்டேன் என சொல்லாமல் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அமர்ந்து பேசி தீர்க்க பழகுவோம். துணைவேந்தர்களை நியனமத்தில் அனைவர் பங்கும் இருக்க வேண்டும். அரசியல் சார்பு இருக்க கூடாது என்பதற்காக தான் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர். தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதே சமயம் ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும். ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றும் போது மக்கள் பலன் பெறுவார்கள். எல்லாவற்றிக்கும் எதிர்வினை ஆற்றும் போது அது வருங்கால சந்த்திக்கு பலனளிக்காது. மசோக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது” என அவர் தெரிவித்தார்.