ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இன்று கேலோ இந்தியா போட்டிகள் துவங்கியது. இப்போட்டியை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இன்று கோவையில் நடைபெற்ற ஆண்கள் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகார் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மற்றும் மிசோரம் அணிகள் மோதிய போட்டியில் உத்தரப்பிரதேசம் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு ஆண்கள் அணி மற்றும் கர்நாடக அணி மோதிய கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஆண்கள் அணி 99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று, 27 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் சண்டிகார் மகளிர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 4 சுற்றுகளையும் கைப்பற்றி 109 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்றது.
அடுத்தடுத்த ஆட்டங்களாக, சட்டிஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மகளிர் அணிகளுக்கிடையே கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேச ஆண்கள் அணி மோதுகின்றன. இப்போட்டிகளை காண பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். இப்போட்டிகளை காண எந்தவித கட்டணமுமின்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து ஆகிய வசதிகள் அரசு சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதில், கேலோ இந்தியா போட்டிகள் முக்கிய பங்காற்றும் என இதில் கலந்துகொண்டுள்ள விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.