கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 




இந்நிலையில் மாணவி, ஆசிரியர் மிதுனுடன் பேசிய வாட்ஸ் ஆப் பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் "பேசி பேசி பாலியல் வரை பேச்சை வளர்ப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆசிரியர் என்பதால் முழுமையாக விலக முடியவில்லை. அதற்காக நான் எல்லாவற்றுக்கும் சம்மதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இப்போது கூட உங்களுக்கு இது தவறாக தெரியவில்லை. அதனால்தான் என்மீது குற்றம் சுமத்துகிறீர்கள். அதுதான் எனக்கு கோபத்தை அதிகரிக்கிறது. 


நான் கால் பண்ணிய போது நீங்க உங்க மேல தப்பே இல்லாத மாதிரி கூலா பேசுனீங்க? உங்களால் தற்போது நான் இயற்பியல் பாட நேரத்தில் வகுப்பறைக்குள் வர முடிவதில்லை. இதை நினைத்து எனக்கு தூக்கம் வரவே மாட்டிங்குது. பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளேன். இந்த பிரச்சனை முடிய வேண்டும் என்றால், தயவு செய்து இந்த பள்ளியை விட்டு சென்று விடுங்கள்” என பதிவிட்டுள்ளார். அதற்கு ஆசிரியர் மிதுன், ”தற்போது வேறு எங்கும் பணி வாய்ப்பில்லை. விரைவில் கிடைத்தால் சென்று விடுகிறேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என பதிலளித்துள்ளார். மாணவியின் அடுத்தடுத்த பல கேள்விகளுக்கு, ஆசிரியர் மிதுன் பதிலளிக்காமல் இருக்கிறார்.




இதற்கிடையில் மாணவி குறித்து சில மாணவிகளிடம் ஆசிரியர் மிதுன் தவறாக பேசியதாக அவருக்கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் மிதுனுக்கு போன் செய்து, மாணவி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்தஆடியோ பதிவும் வெளியாகியுள்ளது. அதில், ”தன்னுடன் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து சக மாணவிகள் இருவரிடம் பேசினீர்களா?” என மாணவி கேட்கிறார். அதற்கு பதிலளித்து பேசும் மிதுன், ”அவர்களிடம் இயல்பாக மட்டுமே பேசியதாகவும், மற்றவர்களிடம் அது குறித்தெல்லாம் பேசவில்லை. அன்று நடந்தது முற்றிலும் விபத்து. உள்நோக்கத்துடன் செய்யவில்லை” என்கிறார். “எனக்கு எப்படி இருக்கும்னு புரிய மாட்டிங்குது” என மாணவி கேட்க, “இந்த பிரச்சனையினால நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாளாச்சு. அதுக்கு அப்புறம் தொல்லை செய்தேனா?” என மிதுன் கூலாக கூறுகிறார். இறுதியாக “எனக்கு சரியாக படவில்லை” என மாணவி மனவேதனையில் கூறி இணைப்பை துண்டிக்கிறார்.