கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.




இந்நிலையில் மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மாணவியின் தந்தை அளித்த புகாரில், ‘எனது மகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பெரிய கடை வீதியில் உள்ள பள்ளியில் படித்தார். 6 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தார். 11 ம் வகுப்பில் பயலாஜி குரூப் எடுத்து படித்து வந்தார்.


கொரோனா தொற்று பரவலால் ஆன்லைனில் படித்து வந்த போது, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களை எடுத்து வந்தார். மிதுன் சக்கரவர்த்தி அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் மெசேஜிலும், வீடியோவிலும் பேசுவார். கடந்த 2021 மார்ச் மாதம் பள்ளியில் அறிவியல் போட்டி நடப்பதாகவும், நன்றாக படிக்க கூடிய மாணவர்களை மட்டும் தேர்வு செய்து இருப்பதாகவும் பள்ளிக்கு வர வேண்டும் என கூறினார். என் மகளுடன் சில மாணவர்களையும் தேர்வு செய்திருப்பதாகவும், மிதுன் சக்கரவர்த்தி பாடம் நடத்துவதாகவும் எனது மகள் தெரிவித்தார். மகளை டூவிலரில் பள்ளிக்கு அழைத்து சென்று வந்த நிலையில், நான் செல்ல தாமதம் ஏற்பட்ட போது இரண்டு முறை அவரே அழைத்து வந்து வீட்டில் விட்டுள்ளார்.




அப்போது வழக்கத்திற்கு மாறாக நேரமாகி வீட்டுக்கு வருவதால் ஏன் லேட்டு என மகளிடம் கேட்ட போதெல்லாம், மிதுன் டீச்சர் படிப்பு போட்டி என்று கூறி என்னை மட்டும் எங்கெங்கையோ கூட்டிட்டு போறாரு. என்னை வேறு ஸ்கூலில் சேர்த்து விடுங்கள். இந்த ஸ்கூல் எனக்கு பிடிக்கல என்றாள். 12 ம் வகுப்பில் வேறு ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். இப்போ மட்டும் போ என அனுப்பி வைத்தேன். இதேபோல அடிக்கடி ஸ்கூலை மாற்றி விடுங்கள் என சோகமாகவும், அழுது கொண்டும் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். மிதுன் டீச்சர் என்னிடம் பழகுவது பிடிக்கவில்லை. ஸ்கூல் பிரின்சிபல், மிதுன் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா ஆகியோரிடம் சொல்லி விட்டேன் என்றாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு செல்வதாக கூறி, வேறொரு பள்ளியில் சேர்த்து விட்டேன். அவள் வெளியே யார் கிட்டையும் பழகாமலும், பேசாமலும் மிகவும் சோகமாக காணப்பட்டாள். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நானும், என் மகளின் நண்பருமான வைஷ்ணவ் கிருஷ்ணாவும் கதவை உடைத்து சென்று, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.




என் மனைவியிடம் தற்கொலை குறித்து சொன்ன போது, பள்ளி ஆடிட்டோரியத்தில் மிதுன் சக்கரவர்த்தி முத்தம் கொடுத்தும் பல விதமாக பாலியல் தொந்தரவு அளித்தை சொன்னார். மகள் படிப்பை தொலைத்து விடுவாள் என்ற பயத்திலும், பள்ளி முதல்வரிடம் சொல்லி இருப்பதால் வெளியே தெரிந்தால் அசிங்கம் என வெளியே சொல்லவில்லை என கூறினாள். என் மகள் தற்கொலை செய்யக் காரணமாக மிதுன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.