கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிறுதுளி அறக்கட்டளை, மார்ட்டின் குழுமம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. இன்று முதல் இரண்டாம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களை சந்தித்து வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.


இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ”கோவை மாவட்டத்தில் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி அறக்கட்டளை சார்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவில் கூடைபந்து போட்டி உட்பட சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தந்தனர். நேரு ஸ்டேடியத்திற்கும் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, மின்விளக்குகள் எல்லாம் மாற்றி புதுப்பிக்கப்பட்டது. அதேபோல் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கும் நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை நிறுத்தி செம்மொழிப் பூங்கா அமைக்க உள்ளார்கள். 


விளையாட்டைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை வாழ்த்தி சொல்ல எதுவும் இல்லை. அதற்கான வாய்ப்பும் கிடையாது. எந்த திட்டமும் வரவில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒரு சாலை கூட போடப்படவில்லை.


அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெறவில்லை. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவதையும் தடுத்து நிறுத்தவில்லை. தற்பொழுது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழக மக்களும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று கூறுகிறார்கள். அந்த நாளை தான் நாங்களும் எதிர்நோக்கி இருக்கிறோம். 


தமிழ்நாட்டில் உள்விளையாட்டு அரங்கம் மட்டுமின்றி மாநகராட்சி பூங்காக்கள், அம்மா பூங்காக்கள் உட்பட எதுவும் பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளையும் கேட்க முடியவில்லை. கவுன்சிலர்கள் அமைச்சர்கள் என யாரையும் கேட்க முடியவில்லை. அதுமட்டுமின்றி கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் எந்த திட்டங்களும் நடைபெறாமல் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்” என பேசினார்


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண