கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வார்டுகள் மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு சிறுவாணி அணையின் இருந்து எடுக்கப்படும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 23 ம் தேதி அணையின் நீர்மட்டம் 11.32 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தற்போது 42.02 அடியாக உயர்ந்து உள்ளது. சிறுவாணி அணை 50 அடி உயரம் கொண்டுள்ள நிலையில், கேரள அரசு 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி அளித்து வருகிறது. கன மழை தொடரும் நிலையில் 45 அடி உயரத்தை சிறுவாணி அணை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அவசரகால வழியாக வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி தண்ணீரில் சிறுவாணி அணையில் இருந்து கேரளா அதிகாரிகள் திறந்து விட்டு உள்ளனர். திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி ஆயிரம் கன அடி தண்ணீரை கேரள அரசு வெளியேற்றி வருவது தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அணை முழு கொள்ளவை எட்டாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் வால்பாறை, சிங்கோனா, சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் கனமழையும், சிறுவாணி அடிவாரம் மற்றும் சோலையார் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 11.4 செ.மீ. மழை பெய்தது.