தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழப்பு ; கோவை அருகே சோகம்

வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தொடர் மழையால் பலவீனமான வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் வால்பாறை, சிங்கோனா, சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் கனமழையும், சிறுவாணி அடிவாரம் மற்றும் சோலையார் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 11.4 செ.மீ. மழை பெய்தது.

கூலி தொழிலாளி உயிரிழப்பு

இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சூலூரை அடுத்த காங்கேயம் பாளையம் ஏடி காலனியில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 48 வயதான கூலி தொழிலாளி சங்கர் கணேஷ் என்பவர் உயிரிழந்தார். சங்கர் கணேஷ், தனது மனைவி ஜோதி மணியுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது தொடர் மழையால் பலவீனமான வீட்டின் ஒரு பக்க மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், சங்கர் கணேஷ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
சத்தம் கேட்டு எழுந்த ஜோதி மணி, இடிபாடுகளில் சிக்கியிருந்த கணவரை மீட்க முயன்றுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன், சங்கர் கணேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், சங்கர் கணேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சூலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு பழமையானது மற்றும் மோசமான நிலையில் இருந்ததால், மண் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் சூலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola