தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக, கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.




கோவை மாநகராட்சி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, ஒப்பணக்கார வீதி, சாரமேடு சாலை, ராமமூர்த்தி சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிபுதூர் மேம்பாலம் வரை, ஹோப் காலெஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி சாலை, டி.பி. சாலை, திருவேங்கடசாமி சாலை, என்.எஸ்.ஆர். சாலை, ஆரோக்கிய சாமி சாலை, சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, மார்கெட் கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்தி மாநகர் சந்திப்பு, ஆவராம்பாளையம் சந்திப்பு, கணபதி, பாப்பநாய்க்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் சாலை, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, மரக்கடை வீதி, காந்திபுரம், சலீவன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.


இதேபோல மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் மற்றும் துணிக்கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பூங்காக்கள், மால்கள் ஆகியவையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.




இந்நிலையில் சனிக்கிழமை நாளான இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக முக்கிய பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன. கோவையின் முக்கிய வணிகப்பகுதிகளான டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.


இரண்டு நாட்கள் விடுமுரை காரணமாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதேபோல சுற்றுலா தலங்கள், வணிகவளாகங்களும் இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டுள்ளன. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் முன்பு, சிலர் வழிபாடு செய்து செல்கின்றனர்.