கரூர் மாவட்டத்தில் நமது அம்மா நாளிதழ் செய்தியாளர் எம்.ஜி.ஆர் கண்ணன் (வயது 84) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார். இவர் கரூர் மாவட்டத்தில் தனது செய்தியாளர் பணியை 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நமது எம்ஜிஆர் நாளிதழ் மூலம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் இடம் புகழ்பெற்ற செய்தியாளராக உருவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் பொறுப்பு வகித்தார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் மாற்றப்பட்ட நிலையிலும், அனைவரையும் அரவணைத்து போகும் செய்தியாளராக இவரது பணி அன்று முதல் தொடர்ந்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மற்ற செய்தியாளர்களை உறவு முறையை வைத்து அழைத்து தனது புதிய யுத்தியை மேற்கொண்ட செய்தியாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் கரூர் மாவட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும், பல்வேறு தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் செய்தியாளராகவும், இருந்து பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூரில் உள்ள பல்வேறு கட்சி நிர்வாகிகளும் எம்ஜிஆர் கண்ணன் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் எம்.ஜி.ஆர் தீவிர விசுவாசி என்பதால் தனது பெயருக்கும் முன்னால் எம்ஜிஆர் என்ற புனைப்பெயரில் அதிமுக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு கட்சி நிர்வாகி இடமும், பாகுபாடு இன்றி பழகக் கூடிய செய்தியாளர் என்ற பெயரும் இவருக்கு உண்டு , அதுபோல் பல்வேறு அரசியல் நிர்வாகிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஆலோசகராகவும் மாவட்டத்தில் வலம் வந்துள்ளார். என்பது கூடுதல் தகவல் . நமது அம்மா நாளிதழ் கண்ணன் இறப்புக்கு கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாள்தோறும் செய்தியாளர்கள் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த முதல் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ள தமிழக அரசு, அவர்களின் மறைவிற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.