கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.


கேரள மாநிலம் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல். 60 வயதான இவர், கேரள காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலையில் தங்கல் கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்தார். இதற்காக பட்டாம்பியில் இருந்து தங்கல் காரில் கோவைக்கு வந்தார்.




கோவை விமான நிலையத்திற்கு தங்கல் வந்த போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது கைப்பையில் எண் 22 எம்.எம் ரக கைத்துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந்ததும் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லாததும் தெரியவந்தது.  இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை செய்த போது, சொந்த பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும், உடமைகளோடு துப்பாக்கி இருந்தது குறித்து தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இருப்பினும் துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் தங்கலிடம் இல்லாததால் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கலிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண