சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 6 பேரிடம் இருந்து  7 கிலோ 908 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


வெளி நாடுகளில் இருந்து பல்வேறு நூதன முறைகளில் தங்கம் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகின்றன. இதனைத் தடுக்க விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய  தமிழகத்தை சேர்ந்த  6 பேரிடம் இருந்து 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.




தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. 6 பேரிடமும் இருந்து தங்கத்தை பறிமுதல் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய  நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் அவர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும்  என கூறப்படுகின்றது. சமீபகாலமாக தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே கடத்தி வருபவர்களை பிடிக்க முடியும் என்பதுடன், வழக்கமான சோதனைகளில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை பிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பிடிபட்ட 6 பேரும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இவர்களை ஓரே நபர் அனுப்பினாரா அல்லது வேறு வேறு நபர்கள் அனுப்பி இருக்கின்றனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.