பிரதமர் நரேந்திர மோடி நாளை கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப் பேரணி மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் இருந்து வாகன பேரணியை துவங்குகிறார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. பின்னர் இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை காலை கேரளா புறப்படுகிறார். பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


போக்குவரத்து மாற்றம்


பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை பிற்பகல் 2 மணிமுதல் போக்குவரத்தில் மாற்றம் செய்து மாநகர காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கனரக வாகனங்கள் நாளை காலை 06.00 மணிமுதல் மற்றும் 19ம் தேதி காலை 11.00 மணிவரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. அவினாசி சாலை அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சக்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.




நாளை மதியம் 14.00 மணி முதல் 20.00 மணி வரை அவினாசி சாலை SNR சந்திப்பு வழியாக 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு, புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். 19ம் தேதி காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிர்க்க வேண்டும். திருச்சி சாலை திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், WPT Junction, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என். ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.


திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம். சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.


இலகுரக வாகனங்கள்


மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது GN Mill மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி KNG புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம். பேருந்துகள் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப் பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்லவேண்டும்.




காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு கணபதி சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம். மருதமலை, வடவள்ளி சாலை, மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து வரும் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம். மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலிரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.


உக்கடம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்


உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி, பூமார்க்கெட். சிந்தாமணி, டி.பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி, பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.