கோவை மாவட்டம் அன்னூர் அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச்  சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  ஆலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்கம்பாளையம் பகுதியில் தனியார் உள்ள அகஸ்தான் நிட் என்ற தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அர்ஜு (26), போலாஸ் பர்மன் (28) ஆகிய இருவர், உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிந்தது.


இதையடுத்து இருவரையும் அன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது அர்ஜு கடந்த 2012 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் டெய்லராக பணிபுரிந்து வந்ததுடன், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றதும், 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூர் பகுதியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.


தங்கக்கட்டிகள் பறிமுதல்




கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


அதில் ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அந்த நபரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த நபரை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவருடைய பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் இருந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயின் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அந்த நபர் குறித்த விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அந்த நபரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.