2026 தமிழக அரசியலில் நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்படும் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில், தேர்தல் களத்தில் ஏற்கனவே அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி களம் கண்டு உள்ள நிலையில், அதே 'வேலுமணி' என்ற பெயரில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேலுமணி vs வேலுமணி
கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்சி வேதியியல் பட்டதாரியான இந்த வேலுமணி என்பவர், எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி முதல் முறையாகத் தேர்தல் களத்தில் குதித்து உள்ளார். 'டைம் ஆஃப் ஃப்ரீடம்' என்ற மாத இதழின் நிறுவனராக இருக்கும் இவர், மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் டெக்னிக்கல் மேனேஜராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தந்தை காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், இவரது சகோதரி சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் ரீதியாக எந்தக் கட்சியிலும் இதுவரை இணையாத இவர், "மக்களுக்குப் பணியாற்றவே இந்தத் தேர்தல் களம்" என்கிற நோக்கில் சுயேச்சையாகக் களமிறங்கி உள்ளார். பொதுவாகத் தேர்தல் காலங்களில் முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளைப் பிரிக்க, அதே பெயர் கொண்ட நபர்களைக் களமிறக்குவது ஒரு அரசியல் தந்திரமாகக் கருதப்படும் சூழலில், இந்த வேலுமணியின் வருகை தொண்டாமுத்தூர் அ.தி.மு.க வில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய கட்சிகளின் பலப்பரீட்சைக்கு இடையே, எந்தப் பலமும் பலவீனமும் இல்லை எனக் கூறி தேர்தல் களத்தில் நுழைந்து உள்ள இந்த பட்டதாரி வேலுமணி, வாக்காளர்களின் கவனத்தை எந்த அளவிற்கு ஈர்ப்பார் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்....
