கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பு காரணமாக இன்று காலை பரபரப்பு நிலவியது.

Continues below advertisement

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீட்டின் அருகில் இருந்த கோழியை பிடித்து, அதை விழுங்க முயன்ற நிலையில் அந்தப் பாம்பு காணப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த பாம்பு

Continues below advertisement

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மிகுந்த கவனத்துடன் பாம்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சில நேரம் நடைபெற்ற முயற்சிக்குப் பிறகு, பாம்பின் பிடியில் சிக்கியிருந்த கோழியை உயிருடன் மீட்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கை அங்கு கூடியிருந்த பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், நிம்மதியையும் ஏற்படுத்தியது. உடனடி நடவடிக்கை எடுத்த வனத்துறையினரின் செயல்பாட்டை அப்பகுதி மக்கள் பாராட்டினர். பின்னர், பிடிபட்ட மலைப்பாம்பு காயம் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை அருகிலுள்ள பாதுகாப்பான வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவித்தனர்.

கோவை புறநகர் பகுதிகளில் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இடையிலான தொடர்பு அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இச்சம்பவத்தில் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உயிரிழப்பைத் தவிர்த்தது பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.