திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்களை கவரும் வகையில், ஊசி வடிவிலான சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குழந்தைகளை எளிதாக கவரும் வகையில், விதவிதமான தின்பண்டங்கள், சாக்லேட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகின்றன. அதில் ஊசியுடன் பயன்படுத்தும் 'சிரிஞ்சு'க்குள் சாக்லேட் அடைக்கப்பட்டுள்ளது. அதை ஊசி போடுவது போன்று அழுத்தியதும், சாக்லேட் வெளியே வரும். கவர்ச்சிகரமாக இருப்பதால் மாணவர்களும் அவற்றை வாங்கி உண்கின்றனர். இதேபோல சிகரெட் வடிவ சாக்லேட்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



பெரும்பாலான தின்பண்டங்களில், தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்ட எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. இதனால், மாணவர்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஊசி சாக்லேட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, இது போன்ற திண்பண்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. 




இந்நிலையில் ஊசி சாக்லேட்கள் விற்பனை தொடர்பாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 46 கடைகளில் குழந்தைகளை கவரும் வகையில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் அடைத்து விற்கப்படும் சாக்லேட்கள், சிரஞ்சு வடிவ சாக்லேட்கள், சிகரெட் வடிவ சாக்லேட்கள்சாக்லேட்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் 23 பாக்கெட் சிகரெட் வடிவ சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 7 கிலோ சிகரெட் வடிவ சாக்லேட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்விற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 




திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாக்லேட்கள் விற்பனை தொடர்பான 16 வழக்குகள் பதியப்பட்டதாகவும், அவற்றில் 12 வழக்குகள் முடிக்கப்பட்டு  ஒரு இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட தாகவும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உணவு பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவன முகவரி இல்லாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண