கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு , தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறிது காலமாகவே ஒற்றை தலைவலி இருந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த 4 வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், கோவையில் அண்மையில் நடந்த மஹாசிவராத்திரியிலும், டெல்லியில் நடந்த மற்ற கூட்டங்களிலும் சத்குரு முழுமையாக பங்கேற்றார். [tw]





[/tw]


கடந்த 14ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சத்குருவுக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர். இதையடுத்து வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த சத்குரு, தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் சத்குரு விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர். சத்குரு நன்றாக குணமடைந்து வருகிறார் என்பதால் கவலைப்பட ஒன்றுமில்லை எனவும், சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது எனவும் ஈஷா யோகா மையத்தினர் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் இருந்து பேசிய வீடியோவை , ஈசா யோக மையம் வெளியிட்டுள்ளது . அதில் பேசியதாவது,  அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என் மண்டையை வெட்டி எதையோ கண்டுபிடிக்க முயன்றனர்.  எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்தும் காலி. அதனால் கைவிட்டு மண்டையில் ஒட்டு போட்டனர். இதோ நான் தில்லியில், மண்டையில் ஒட்டு போட்டதுடன் இருக்கிறேன். ஆனால் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.