கோவை மாவட்டம் மாதம்பட்டி பகுதியில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”எந்த திட்டமும் தராத முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 18 மாத திமுக ஆட்சியில் ஒரு திட்டமும் செய்யவில்லை. விளம்பரத்தில் மட்டும் ஆட்சி நடத்தும் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். திமுக செய்த ஒரே சாதனை அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை திட்டங்களை இரத்து செய்தது தான்.


எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்து இறக்க‌ எவ்வளவோ சதி செய்தார்கள். நான்கரை ஆண்டுகள் ஆட்சி நடத்தி பல அற்புதமான திட்டங்களை தந்தார். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் தான். திமுக ஆட்சியில் கரும்பே போராடி வாங்க வேண்டியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை ஸ்டாலின் அள்ளி‌அள்ளி வீசினார். ஆனால் எந்த வாக்குறுதியும் செய்யவில்லை. எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் வந்து மக்களிடம் பெட்டியோடு வந்து வாங்கிய மனு என்னவானது? பெட்டி என்னவானது?


கோவை மாவட்டம் முழுவதும் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக தந்தது. சாலை விரிவாக்கம், மேற்கு புறவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இரண்டு மூலம் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் கொண்டு வரும் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தை புறக்கணிக்கிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சாராக்கிரதே ஸ்டாலின் செய்த சாதனை. 




திமுகவினர் எல்லா பக்கமும் இலஞ்சம் வாங்குகிறார்கள். அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை. 50 ஆயிரம் கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது. கையாலாத ஒன்றும் தெரியாத முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். திமுக ஆட்சியில் கொரோனா வந்த போது கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். மக்கள் உயிரை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என மக்கள், அரசு அதிகாரிகள் நினைக்கின்றனர்.


திமுக ஆட்சியில் இருக்கும் போது மட்டுமே சொத்து வரி உயர்கிறது. அதிமுக ஆட்சியில் உயரவில்லை. சில பத்திரிகைகள் ஜால்ரா போடாமல் இருந்தால், இந்த ஆட்சி போய்விடும். திமுகவினர் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள். 39 எம்.பி.களும் எதுவும் செய்யாமல் இருக்கின்றனர். அதிமுக மத்திய அரசுக்கு அடிமைகள் என்கின்றனர். ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் தான் அடிமைகள். எங்களை யாரும் அடிமை என சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.


காவல்துறையினர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்த பிறகே, பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுகவினர் கைது செய்யப்பட்டார்கள். காவல் துறையினர் பொய் வழக்கு போட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வேறு மாதிரி இருக்கும்” எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் சாலைகள் முழுமையாக பழுதடைந்துள்ளது. எந்த திட்டமும் கோவை மாவட்டத்திற்கு வரவில்லை 


பாமகவால் தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது என்ற பாமக வழக்கறிஞர் பாலுவின் கருத்து கேள்விக்கு, ”இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்வார்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. கூட்டணி பேசும் போது நானும் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. தமிழ்நாட்டில் பெரிய கட்சி திமுக கிடையாது. அதிமுக தான். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பலமாக உள்ளது. திமுகவிற்கு தைரியம் இருந்தால் தனியாக தேர்தலில் நிற்கட்டும். எங்களுக்கு இணையான‌ கட்சி வேறு இல்லை. கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்வோம். நிறைய கட்சிகள் நாங்கள் வளர்ந்து விட்டோம் என சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் பலம் அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதை ஊடகங்கள் மறைத்து திமுக ஆட்சியை தூக்கி பிடித்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் கைவிட்டால் திமுக ஆட்சி போய்விடும்” எனத் தெரிவித்தார்.