கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.
அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகள் 90 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும் 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக உள்ளதால், இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் கேரள அரசு புதிய தடுப்பணை கட்டி வருவது கண்டிக்கத்தக்கது. தற்போது கட்டப்பட்டு வரும் அணையை போல் சிறுவாணி ஆற்றின் குறுக்கே மேலும் இரண்டு புதிய தடுப்பணைகளை கேரள அரசு கட்ட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதால் பில்லூர் அணைக்கு நீர் வரத்து குறையும். மேலும் கோவை மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படும்.
கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதை வழக்கமாக கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையில் அவ்வாறு நடந்து கொள்ளாமல், போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அனுமதி மற்றும் ஆலோசனையுடன் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்