அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியை கொண்டாடுவது தொடர்பாக, கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ”எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக வர இருக்கிறார். அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளது.
அதிமுகவினர் கட்சி கொடி கம்பம் நட காவல்துறையினர் தடுக்கின்றனர். அதிகாரிகள், காவல் துறையினர் திமுக கட்சிக்காரர்கள் போல நடந்து கொள்கிறார்கள். திமுக மீது மக்களிடம் எதிர்ப்பு அதிகமாக உள்ளது. திமுக மிரட்டலுக்கு பயப்படாமல் அதிமுக ஐ.டி. விங்க் சிறப்பாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே துணிச்சலாக திமுகவைவும், ஸ்டாலினையும் எதிர்க்கிறார். திமுக எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ். நீட் தேர்வை சொல்லி திமுக ஏமாற்றிக் கொண்டுள்ளது.
கோவையில் சாலைகள் எங்கும் மோசமாக உள்ளது. சாலைகளை போட்டு தருமாறு திமுகவினரிடம் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். சில மீடியாக்கள் திமுக ஆட்சியை தூக்கிப் பிடிப்பதை கைவிட்டால், ஆட்சி போய்விடும். தமிழக மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத முதலமைச்சர் ஸ்டாலின். எங்கு பார்த்தாலும் இலஞ்சம். குடும்ப ஆட்சி, மோசமான ஆட்சி நடக்கிறது. அதிமுகவின் 51 வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். இந்த மோசமான ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் இருக்கின்றது. திமுக முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அதிமுக கொடுத்தது. இப்போது கோவையில் எந்த சாலையிலும் மக்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது. மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மோசமாக இருக்கின்றது.
இந்த ஆட்சி மாற வேண்டும். மக்கள் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி முடிவு செய்து விட்டனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருந்திருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் எப்போதும் இரு மொழி கொள்கை தான். மும்மொழி கொள்கை இல்லை. இந்தி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். பா.ஜ.க தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை எடுக்க சொல்ல வேண்டும். நாளை கோவை வரும் மத்திய விவசாய துறை அமைச்சரை சந்தித்து, உரம், கொப்பரை தேங்காய் விவகாரம் குறித்து மனு அளிக்கப்படும். திமுகவின் 39 எம்.பி.க்கள் எதுவுமே செய்யவில்லை. காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்ற அதிமுகவினர் முடக்கினர். திமுகவினர் யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக அந்த கட்சியினரும் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.