கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் வெற்றிவேல், பிரவீன் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பிரவீனுக்கு ஆதரவாக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான தீபக் என்பவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவீந்திரா என்பவரையும், அவரது கூட்டாளிகளையும் அழைத்து வந்து வெற்றிவேல் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த இருசக்கர வாகனம் உட்பட பொருட்களை தூக்கிச் சென்றனர்.


இது தொடர்பாக கோவில் பாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி வெற்றிவேல் அளித்த புகாரில் 9  பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டு அதில் பிரதீப் , தீபக், ஜெர்மன் ராகேஷ், சந்தோஷ், ராகுல் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில்  தொடர்புடைய ரவுடி ரவீந்தரா, நந்தகுமார் மற்றும் சிராஜுதீன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தனர். 


தலைமறைவான ரவீந்திரா, நந்தகுமார், சிராஜுதீன் ஆகிய மூன்று பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 3 பேரும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர். பின்னர் சிம்லா சென்ற காவல் துறையினர் கடந்த 15 ம் தேதி மூவரையும் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, கொள்ளைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கோவில்பாளையம் ஏரோ சிட்டி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து ரவீந்திரா மற்றும் நந்தகுமாரை ஆகியோரை காவல் துறையினர் அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு பேரும் காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்ற போது அருகில் உள்ள பள்ளத்தில் இருவரும் விழுந்ததில், இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரவீந்திரா மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 9 வழக்குகளும், நந்தகுமார் மீது கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.