நவம்பர் மாதம் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை வலுவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்று நள்ளிரவில் ஈரோடு சுற்று வட்டாரத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் அந்த ஓடையை ஒட்டிய தடுப்புச் சுவரைத் தாண்டி அருகில் உள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளை சுற்றி எங்கும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. அந்த நீரை வெளியேற்றும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மல்லி நகரில் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் கடும்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து பிச்சைக்காரன் பள்ளத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும், குடியிருப்பு பகுதியில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.