கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். 36 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் பொது இடங்கள், அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
மகாகவி பாரதியாரியரின் மிகப்பெரிய கனவான ’குயில் தோப்பு’ என்பதை காட்சியாக உருவாக்கும் வகையில்,அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட்டு, இக்கால சமுதாயத்தினர் பாரதியாரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது பணிகளை பாராட்டி யோகநாதனுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டில் ’பசுமை போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார். மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்சி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப்பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் யோகநாதன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது ஹீமோ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவ வேண்டுமென கோரி, கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும், பணிக்கு செல்லாமல், வருமானமும் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ள அவர், முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைக்கு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்