சி.பி.எஸ்.இ. 11-ஆம் வகுப்பு உடற்கல்வி பாடப்புத்தகத்தில், கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் நாணம்மாள். யோகா பாட்டி என்றாலே நாணம்மாள் தான் என நினைவுக்கு வரும் அளவிற்கு இவர் பிரபலமானவர்.  99 வயது வரை வாழ்ந்த இவர், பொள்ளாச்சி அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920 ம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதில் யோகாசன பயிற்சிகளை முறையாக கற்றுக்கொண்ட நாணம்மாள், மற்றவர்களுக்கும் யோகாவினை பயிற்றுவித்து வந்தார். மேலும் ஏராளமான யோகா ஆசிரியர்களையும் உருவாக்கியவர். நாணம்மாள் குடும்பமே யோகா ஆசிரியர்களாக இருந்து வருகின்றனர். தனது முதுமை காலத்திலும் தொடர்ந்து யோகா குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். மேலும் முதுமை காலத்திலும் பல யோகாசானங்களை செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தார்.


இயற்கை உணவும், யோகாவும் முதுமை காலத்திலும் ஆரோக்கியமாக இருக்க உதவியதாகவும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ யோகா உதவுமெனவும் நாணம்மாள் தெரிவித்து வந்தார். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் யோகாசனங்களை செய்தும், யோகா வகுப்புகளை நடத்தி தொடர்ந்து யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி ஏற்படுத்தி வந்தார். இவரது சேவைக்காக நாணம்மாளுக்கு பத்ம  ஸ்ரீ, குடியரசு தலைவரின் நாரி சக்தி புரஸ்கார் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கெளரவித்து உள்ளது. இதேபோல பல்வேறு விருதுகளை நாணம்மாள் தனது அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்காக பெற்றுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது 99 வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நாணம்மாள் உயிரிழந்தார்.


இந்நிலையில் சி.பி.எஸ்.இ 11-ஆம் வகுப்பு உடற்கல்வி பாடப்புத்தகத்தில், உங்களுக்கு தெரியுமா என்ற பகுதியில் கோவையை சேர்ந்த யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், “இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான நாணம்மாள் கோவையை சேர்ந்தவர். இவர் 45 ஆண்டுகளில் 10 இலட்சம் யோகா மாணவர்களை உருவாக்கியுள்ளார். இவரிடம் படித்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகம் முழுவதும் தற்போது யோகா ஆசிரியர்களாக பயிற்சி அளித்து வருகின்றனர். இவரது சேவைக்காக 2016-ஆம் ஆண்டில் மத்திய அரசின் ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்” என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. பாடப்புத்தகத்தில் நாணம்மாள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ளதால், யோகா பாட்டி நாணம்மாள் குறித்து நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அறிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.