பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தின் அமைப்பையே மாற்றும் வகையில் இருக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், பி.ஆர்.அம்பேத்கர் கனவுகளை நிறைவேற்றும் ஒரு முக்கிய முன்னேற்றம் என்றும் குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவையின் மொத்த இடங்கள் 816 ஆக அதிகரிக்கலாம் என்றும், அதில் சுமார் 273 இடங்களில் பெண்கள் இடம்பெறுவர் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாற்றம் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதன் பின்னரும் அரசியல் அமைப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் எனவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். இதேபோன்று, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது முக்கிய முன்னேற்றம் என்றும், அவர் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற நடிகர்-அரசியல்வாதிகளின் வரிசையில் திகழக்கூடியவர் என்றும் அத்வாலே கூறினார்.
தற்போதைக்கு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு தேவையானால் அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். விஜய் அதிக வாக்குகளைப் பெறக்கூடியவர் என்பதால் திமுகவுக்கு சவாலாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.
மேலும், பெண்கள் மற்றும் பட்டியலின சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளை தடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "சப்கா சாத், சப்கா விகாஸ்" என்ற முழக்கம் தமிழக மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தார்.
