கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துவக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பிற்காக தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்களையும் அதன் பலன்களையும் குறித்து எடுத்துரைத்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் சாலை பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கூடுதலாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். சக்தி ரோடு சாலை அகலப்படுத்துவதற்காக 54 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் அதனை தருவதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என தெரிவித்தார்.



அதானி - திமுக தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை, எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்றார். உள்ளூரில் நின்றாலும் தோல்வி வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள் அவர்களுடைய இருப்பிடத்தை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.


அரசியல் என்பது நாகரீகமாக இருக்க வேண்டும். அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவ பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கூறிய அவர், அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள் என்றார்.


பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளும் மழையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது என்றார். விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்ப நின்ற அளவிற்கு அரசின் இயந்திரம் சிறப்பாக செயல்பட்டது என்றார்.