வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
தொடர் மழை காரணமாக குளங்கள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் மழை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக வாலாங்குளம் நிரம்பியுள்ளது. இதன் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி சாலை புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் ஆறு போல ஓடி வருகிறது. நேற்றைய தினம் இந்த வெள்ள நீர் அப்பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் புகுந்ததால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல சாலைகளில் தேங்கிய வெள்ள நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஒலம்பஸ், இராமநாதபுரம், சவுரிபாளையம், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடி வருகிறது. வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வடியாததால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மழை நீர், சாக்கடை நீர் சேர்ந்து தேங்கி இருப்பதால், காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களில் வேலைகளுக்கு செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறிய குளத்தின் உபரி நீர் சாக்கடை அடைப்பு காரணமாக சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கியுள்ளதாகவும், சாலைகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றவும், வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்