கோவை மாநகரின் பிரதான சாலைகளில் முதன்மையானது, கோவை–அவிநாசி சாலை. கோவை மாநகரத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியையும் இணைக்கும், இச்சாலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், கோவை விமான நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அதிக அளவிலான கல்லூரிகள் இச்சாலையில் அமைந்து இருப்பதால், ’கோவையின் கல்லூரி சாலை’ என அழைக்கப்படுவதும் உண்டு. எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சாலையாக கோவை–அவிநாசி சாலை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாதசாரிகள் சாலையை கடப்பது என்பது பெரும் சிரமமாக இருக்கிறது. ஆனால் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாதசாரிகளுக்கு அந்த கவலை இல்லாமல் இருந்தது. ஏனெனில் பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி அருகேயுள்ள பாலம் சாலையை கடக்க உதவிகரமாக இருந்தது. இதனால் பீளமேடு என்றாலே, பி.எஸ்.ஜி பாலம் நினைவுக்கு வருமளவு கோவையின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது.




பீளமேடு பகுதியில் பிரபல பிஎஸ்ஜி கல்வி குழுமங்களின் கல்லூரிகள் அமைந்துள்ளன. அவிநாசி சாலையின் இரு புறமும் அக்குழுமத்தின் கல்லூரிகள் அமைந்துள்ளன. பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி, பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரி, டிப்ளமோ கல்லூரி, சர்வஜன பள்ளி, பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு முறையும் வகுப்பிற்கும், செய்முறை வகுப்பிற்கும், மைதானத்திற்கும், அரங்கத்திற்கும் செல்லும் போது அவிநாசி சாலையை கடக்க வேண்டிருந்தது. இதனால் அவிநாசி சாலையின் குறுக்கே அக்கல்வி குழுமம் சார்பில் மாணவர்கள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் அக்கல்லூரி மாணவர்கள் மட்டுமே சாலையை கடக்க பயன்படுத்தி வந்தனர். பின்னர் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பாதசாரிகள் எளிதாக சாலையை கடந்து செல்ல உதவியாக இருந்து வந்தது.




இந்நிலையில் கோவை – அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டருக்கு உயர் மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீளமான பாலமாக 1600 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச் சாலையாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பால கட்டுமான பணிகள் முழு வீச்சில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. அவிநாசி சாலையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இந்தப் பால பணிகளுக்காக பி.எஸ்.ஜி நடைபாதை பாலம் அகற்றும் பணிகள் துவங்கியுள்ளன. மேம்பாலப் பணிகளுக்காக இந்தப் பாலம் முழுமையாக அகற்றப்பட உள்ளது. இதையளித்த கோவை வாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் அப்பாலம் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.