கோவை விமான நிலையத்தில் ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சிட்ரா பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கி குண்டுகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவைக்கு வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு பயணிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது உள்ளாடையிலும், உடலிலும் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 1.10 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்க கட்டிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரத்தை சேர்ந்த நசரூதீன் முகமது தம்பி, கலீல் ரகுமான் முஸ்தபா என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கக் கட்டிகளை வேறு யாரேனும் கொடுத்து அனுப்பினார்களா? இதற்கு முன்பு இதே போன்று இவர்கள் தங்கம் கடத்தி வந்த உள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்