Coimbatore Airport: கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கும் செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள்:

நகரமயமாதல் அதிகம் உள்ள மாநிலங்களில் நாட்டில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மையானதாக திகழ்கிறது. மாநிலத்தின் அடையாளமாக உள்ள சென்னையில், பொதுமக்களின் தேவைக்கேற்ப ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியான மிக முக்கிய நகரமாக கோவை வளர்ந்து வருகிறது. அதன் காரணமாகவே அங்கும் மெட்ரோ ரயில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த நகரை மேலும் வணிகமயமாக்கும் நோக்கில், கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டப்பணிகளும் வேகமெடுத்துள்ளன.

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை:

கோவை நகர மையத்திலிருந்து வெறும் 11 கி.மீ தொலைவில், பீளமேட்டில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கையாள முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் பயணிகளின் கையாளும் திறன் 20 லட்சமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டில் 30 லட்சமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில் 51,934 ஆக இருந்த சர்வதேச பயணிகள் 2024 ஆம் ஆண்டில் 2,35,582 ஆகவும், அதே காலகட்டத்தில் உள்நாட்டு பயணிகள் 12.2 லட்சத்திலிருந்து 28.2 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 35 லட்ச பயணிகளைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது காலத்தின் கட்டாயமாக உருவெடுட்துள்ளது.

வேகமெடுக்கும் பணிகள்:

அதன்படி, கோயம்புத்தூரின் விமான உள்கட்டமைப்பை மாற்றும் மற்றும் வளர்ந்து வரும் பயணத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் விரிவாக்க பணிகளுக்கு மத்திய அரசு ஒப்பந்தம் அளித்தது. சிங்காநல்லூர், உப்பிலிப்பாளையம், காளப்பட்டி மற்றும் இருகூர் ஆகிய நான்கு கிராமங்களில் 23 தொகுதிகளை உள்ளடக்கிய பட்டா நிலம், பாதுகாப்பு நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் உட்பட மொத்தம் 632.95 ஏக்கர் நிலம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. நீண்டகால காத்திருப்புக்கு பிறகு, இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக 470.17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய விமன நிலையத்தின் வசதிகள்:

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எல்லைச் சுவர் கட்டுவதற்கான டெண்டர்களை கோரியுள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) ஆவணத்தில் இணைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தற்போதுள்ள விமான நிலையத்தின் தெற்குப் பகுதியில் ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டிடம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் தொழில்நுட்பக் கட்டிடம், சரக்கு முனையம் மற்றும் புதிய அணுகு சாலை உள்ளிட்ட புதிய வசதிகள் அடங்கும். முதற்கட்ட கட்டுமான பணியில் ஏரோபிரிட்ஜ்களுடன் கூடிய 10 மல்டிபிள் ஏப்ரான் ரேம்ப் சிஸ்டம்ஸ் (MARS) அமைக்கப்பட உள்ளன. ஒரு MARS தளமானது ஒரு அகலமான உடல் விமானம் அல்லது இரண்டு குறுகிய உடல் விமானங்களை கையாளக்கூடியது. 

கூடுதல் வசதிகள் என்ன?

விமான நிலைய விரிவாக்கத்தில் தற்போதைய ஓடுதளமானது 9,500 அடியிலிருந்து 12,500 அடி வரையிலான நீட்டிப்பும் அடங்கும். இது விமான நிலையம் பெரிய விமானங்களைக் கையாளவும் சர்வதேச இணைப்பை மேம்படுத்தவும் அனுமதிக்கிறது.  கிழக்கு முனையில் இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்படும். உணவு அரங்கம், பேருந்து நிலையம், நடுத்தர மற்றும் உயர்ரக ஹோட்டல்கள், டாக்ஸிவே மற்றும் பிற பயணிகள் வசதிகளுடன் கூடிய பல நிலை வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் விரிவாக்க திட்டத்தில் அடங்கும். 

எல்லைச்சுவருக்கான டெண்டர்

மொத்தம் 16.67 கி.மீ தூரத்திற்கு ரூ.29.19 கோடி மதிப்பீட்டில், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு எல்லைச் சுவர் கட்டுவதற்கு டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதில் செயல்பாட்டுப் பகுதிக்கு 9,063 மீட்டர் எல்லைச் சுவரும், செயல்படாத பகுதிக்கு 7,600 மீட்டர் சுவரும் அடங்கும்.

கட்டுமான பணிகள் எப்போது?

சமீபத்தில் AAI நில ஆலோசகரை ஈடுபடுத்துவதற்கான டெண்டர்களை அழைத்தது.  தொடர்ந்து  எல்லைச் சுவர் கட்டுவதற்கான டெண்டர்களையும் கோரியுள்ளது. இந்த இரண்டு முன்னேற்றங்களின் அடிப்படையில், கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கான இறுதி மாஸ்டர் பிளானுக்கு விரைவில் நிர்வாக அனுமதி வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதனால் விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம். அதற்கான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டிற்கான டெண்டர்கள் விரைவில் கோரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.