கோவை: இணையத்தில் AI வாயிலாக பிரபலங்களுடன் இணைத்து பதிவிடும் புகைப்படங்களால் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு அவர்களே பொறுப்பு என மேட்டுபாளையம் போலீசார் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Continues below advertisement

ட்ரெண்டாகி வரும் AI புகைப்படங்கள் 

சமூக வலைதளங்கள் முழுவதும் தற்போது AI புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது. புகைப்படங்களை AI செயலிகள் வாயிலாக வெளிநாடுகளில் இருப்பது போல், வேறு ஒருவருடன் கை கொடுப்பது போல், பிரபலங்களுடன் சந்திப்பது போல் என பல்வேறு விதங்களில் நாம் விரும்பியவாறு உருவாக்கலாம்.

சைபர் மோசடி கும்பல்கள் போலி AI கும்பல்

இதை பலரும் ஆர்வமுடன் பதிவிட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி, சைபர் மோசடி கும்பல்கள் போலி AI செயலிகளை உருவாக்கி லிங்க் அனுப்பி, பல தரப்பட்ட தகவல்களை திருடி, வங்கி கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. போலி AI செயலிகளை அறிந்து மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

Continues below advertisement

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சின்னகாமணன் கூறியதாவது:-

AI வாயிலாக புகைப்படங்களை பதிவிடும் முன் கவனம் தேவை. சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் அழைப்புகளை அப்படியே நம்பக்கூடாது. சமூக வலைதள லிங்குகளை கையாளும் போது கவனம் தேவை. போலி லிங்குகளை தொட்டு, சைபர் மோசடியில் சிக்கிகொள்ள வேண்டாம்.

போலீஸ் எச்சரிக்கை

ஒரு செயலியை நாம் பதிவிறக்கம் செய்யும் போதே அதற்கு நாம் அனைத்து அனுமதிகளையும் கொடுத்துவிடுகிறோம். நமக்கு எது தேவையோ அந்த செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பிரபலங்களுடன் இணைத்து வெளியிடப்படும் புகைப்படங்களால் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு புகைப்படங்களை வெளியிட்டவரே பொறுப்பு. செல்போன்களில் எத்தனையோ நல்ல செயலிகள் உள்ளது. அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனை கல்வி போன்றவைக்கு பயன்படுத்துங்கள். சைபர் கிரைம் கும்பல்கள் போலி செயலிகள் வாயிலாக பணம் மோசடி செய்ய வாய்ப்புள்ளது.

இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சைபர் மோசடி நடந்தால் 1930 அழைக்கவும். இவ்வாறு அவர் கூறினார். மேட்டுப்பாளையம், அன்னுார், சிறுமுகை, காரமடை பகுதிகளில் உள்ள கிராமப்புறங்கள், பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளில் போலீசார் சைபர் கிரைம்கள் குறித்து நோட்டீஸ் வழங்கியும், நேரடியாக மக்களை சந்தித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.