மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நடப்பாண்டு தொடங்கி ஐந்தாவது முறையாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணங்கள்
மக்களவை தேர்தல் வருவதை ஒட்டி பிரதமர் மோடி தமிழ்நாட்டை குறிவைத்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதோடு, திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தையும் திறந்து வைத்தார். பின், கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற கேலே இந்தியா இளைஞர் விளையாட்டின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் இறைவழிபாடு நடத்தினார்.
கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து இன்று ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.
ட்ரோன் பறக்க தடை
இதனைத்தொடர்ந்து ஆறாவது முறையாக வருகின்ற 18 ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் பிரதமர் கலந்து கொள்கிறார். கண்ணப்பன் நகர் பிரிவு சாலையில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வாகன அணிவகுப்பு பேரணியானது நடைபெற இருக்கிறது. இதில் கோவை மட்டுமின்றி மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பேர் வரை பிரதமர் நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவல் துறையினரை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை நகரில் பிரதமர் வருகையின் போது சுமார் 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பிற்கான எஸ்.பி.ஜி பிரிவு அதிகாரிகளும் வாகன பேரணி நடைபெறும் பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகின்றனர்.
இதனிடையே கோவையில் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவித்துள்ளது, கோசை மாநகர காவல் துறை. இந்த பகுதிகளில் 19-ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க மாநகர காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். பிரதமர் மோடி வருகைக்கான ஏற்பாடுகளும், அதையொட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோவையை குறிவைக்கும் பாஜக
கோவை மக்களவை தொகுதியை பாஜக முக்கியமான தொகுதியாக பார்த்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி கோவை தெற்கு தொகுதியை பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தன்வசம் வைத்துள்ளார். பாஜக வலுவாக உள்ள பகுதியாக கருதப்படும் கோவையில், அக்கட்சி கணிசமான வாக்கு வங்கியையும் வைத்துள்ளது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என பாஜக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கோவை, நீலகிரியை மையப்படுத்தி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடியின் கோவை வருகை தர உள்ளார். இந்த தொகுதியில் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடலாம் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது