கொலை முயற்சியில் தப்பிய ‛வட்டி’ பாட்டி கொரோனாவிற்கு பலி

வட்டி கேட்டு தொல்லை தந்த மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்து மீண்ட அவர் கொரோனா தொற்றில் சிக்கி பலியானார்.

Continues below advertisement

கோவை அருகே வட்டி கேட்டு தொல்லை செய்த மூதாட்டியை கடத்தி கொலை செய்து நகையை அபகரித்து நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

கோவை மாவட்டம் நரசீபுரம் அருகேயுள்ள வெள்ளிமலைப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்.  35 வயதான இவர், கடந்த 10 ஆம் தேதி 60 வயதான தனது தாய் சின்னத்தங்கம் என்கிற சுப்புலட்சுமியை காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன சின்னத்தங்கம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சின்னத்தங்கத்தின் செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி (49) என்பவரது வீட்டிற்கு வட்டி பணத்தை வசூலிக்க சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீராசாமி வீட்டிற்கு சென்ற காவல் துறையினருக்கு, அங்கு வீராச்சாமி இல்லாதது சந்தேகத்தை அதிகரித்தது. மேலும் வீராசாமியின் செல்போன் சிக்னல்களை வைத்து  தேடுதல் பணியை தீவிரப்படுத்திய போலீசாருக்கு கரூரில் வீராசாமி தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீராசாமியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட வீராசாமி

அதில் சின்னத்தங்கத்திடம் வீராசாமி 50  ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், கடந்த 8 ஆம் தேதி சுப்புலட்சுமிக்கு போன் செய்து வட்டி பணம் வந்து வாங்கிச் செல்லுமாறு போன் செய்துள்ளார். இதை நம்பி வீராசாமியின் வீட்டிற்குச் சென்ற சின்னத்தங்கத்திடம்  நைசாக பேசி தூக்க மாத்திரையை உயர் ரத்த அழுத்த மாத்திரை எனக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட சின்னத்தங்கம் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதைப் பயன்படுத்தி வீராசாமி சின்னத்தங்கத்தை தனது காரில் ஏற்றி பொள்ளாச்சி - நெகமம் சாலையில் உள்ள பிஏபி கால்வாய் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கியதோடு, இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். மயக்கத்தில் இருந்த சின்னத்தங்கம் மரணமடைந்ததாக நினைத்து பிஏபி கால்வாய் தண்ணீரில் தள்ளி விட்டு, கரூருக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னத்தங்கத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெகமம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சின்னத்தங்கத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இதுகுறித்து தகவல் கிடைத்த ஜெகதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தனது தாய் என்பதை உறுதிசெய்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சின்னத்தங்கம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சின்னத்தங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஆலாந்துறை காவல் துறையினர், வீராசாமியை கைது செய்தனர். சின்னத்தங்கத்திடம் இருந்து பறித்துச் சென்ற 6.5  சவரன் தங்க நகையையும்  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆள் கடத்தல் நகை பறித்தல், கொலை செய்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வீராசாமி மீது வழக்கு  பதிவு செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola