தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பண்டிகையாக இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை என பாரம்பரிய உடைகளை அணிந்து கலந்து கொண்டனர். புடவை அணிந்து வந்த மாணவியர் நடனமாடி, மண் பானையில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகள் வண்ண கோலமிட்டு, கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உறியடித்தல், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதே போல பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை நா. மூ. சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மத ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய மரபு விளையாட்டுகளான உறி அடித்தல், கும்மியடித்தல், கயிறு இழுத்தல், குதிரை வண்டி ஓட்டுதல் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழர்கள் பாரம்பரிய இசையான பறை இசைக்கு நடனம் ஆடினார். மாணவர்கள் மேலும் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து புதுப் பானையில் பொங்கல் வைத்து குலவை இட்டு பொங்கல் விழாவை விமர்சையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பூட்டன், இலங்கை நாடுகளை சேர்ந்த கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவ மாணவிகள் கூறுகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், தங்களுடன் பூட்டான் இலங்கை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நண்பர்களுடன் உறியடி, கயிறு இழுக்கும் போட்டி, குதிரை வண்டியில் பூட்டான் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் ஒற்றுமை நிலை நாட்டும் விதமாகவும் எல்லோரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.