மீண்டும் கிராமத்திற்குள் புகுந்த மக்னா யானை: மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் மயக்க கூசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த யானை விடப்பட்டது. ஆனால் வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை, பொள்ளாச்சி பகுதியை கடந்து கோவை மாநகர பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அந்த யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Continues below advertisement

இருப்பினும் அந்த மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி, சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாய விளை பொருட்களையும் அந்த யானை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்னா யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு, சரளப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

கும்கி யானைகளை கொண்டு வந்து பல நாட்களாகியும் வனத்துறையினர் மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும், கும்கி யானைகள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மக்னா யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக மக்னா யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கடந்த 28 ம் தேதியன்று கும்கி யானைகளை டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


இந்நிலையில் நேற்று மாலை சேத்துமடை பகுதிக்கு கும்கி யானைகள் மீண்டும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அதிகாலையில் சேத்துமடை பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் மக்னா யானை நுழைந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வன கால்நடை மருத்துவர் குழுவினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மக்னா யானையின் கால்களை கயிறுகளால் கட்டிய வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்னா யானையை வால்பாறை அருகே குடியிருப்புகள் அதிகம் இல்லாத சின்னகல்லார் வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்னா யானை பிடிக்கப்பட்டதால் சேத்துமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola