காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து செயல்படுத்தும் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டத்தின் கீழ் 1 லட்சம் டிம்பர் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு சாதனை படைத்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் பசுமை பரப்பை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தில் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து, நொய்யல் ஆற்றுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சுமார் 60 கிராமங்களுக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து பேசினர். மற்ற பயிர்களுடன் டிம்பர் மரங்களையும் சேர்த்து நட்டு ‘மரம்சார்ந்த விவசாயம்’ செய்வதால் சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கிடைக்கும் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரங்கள் நடுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டினர். இதை தொடர்ந்து, விவசாயிகளின் பொருளாதார தேவை மற்றும் அவர்களுடைய மண்ணின் தன்மைக்கு ஏற்ற மலைவேம்பு, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, போன்ற டிம்பர் மரங்களை களப் பணியாளர்கள் பரிந்துரைத்தனர். மேலும், ஈஷா நாற்றுப் பண்ணைகளில் இருந்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக விநியோகித்ததோடு மட்டுமின்றி அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகளையும் சொல்லி கொடுத்தனர். இதன் விளைவாக, இவ்வியக்கத்தின் களப் பணியாளர்களின் வேகமான செயல்பாட்டால் ஓராண்டிற்கு திட்டமிடப்பட்ட இலக்கு வெறும் இரண்டே மாதத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
இதன் நிறைவு விழா மத்திப்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவர்னர் ராஜ்மோகன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம், "காடுகளை அழிப்பது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் துயரமான சம்பவம். காடுகள் அழிவதால் வாழ்வியல் மாற்றம், பல்லுயிர் பெருக்க மாறுதல், வறட்சி, பாலைவனம் உருவாதல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு 31 சதவீத காடுகள் இருந்தது.
1988 ம் ஆண்டில் ஒன்றிய அரசு ஒரு குழு அமைத்து 75 வது சுதந்திர தினத்திற்குள் 33 சதவீத காடுகளை உருவாக்க வேண்டும் என திட்டங்களை வகுத்தது. ஆனால் காடுகள் உருவாக்கபாபடுவதற்கு, மாறாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 18 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு கொண்டுள்ளது. ஒரு ஆண்டில் வங்கதேசம் நாட்டின் அளவிற்கான காடுகள் அழிக்கப்படுகிறது. ஒவ்வொரு மணித்துளியும் 2400 மரங்கள் வெட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் 27 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. 3.04 சதவீதம் மட்டுமே அடர் வனம் இந்தியாவில் உள்ளது. 21.72 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. ஆண்டிற்கு 0.04 சதவீதம் வனப்பரப்பு மட்டுமே அதிகரித்துள்ளது.க்ஷ்
தமிழ்நாட்டில் 33 சதவீதம் காடுகள் வேண்டும் என்றால், 11 கோடிக்கும் மேலான மரங்கள் நட வேண்டும். தமிழ்நாட்டில் 22 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. 11 சதவீதம் வனப்பரப்பு அதிகரிக்க வேண்டும். காடுகளை கூகுள் மேப்பில் பார்த்து தான் கணக்கீடு செய்கின்றனர். நேரடியாக ஆய்வு செய்வதில்லை. தென்னை, மாமரம் போன்ற மரங்களும் வனமாக கணக்கீடு செய்யப்படுகிறது. இதனை வனமாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் 11.50 சதவீதம் தான் உண்மையான வனம் உள்ளது.
தமிழ்நாட்டில் 3650 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 63 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. கோவை - பொள்ளாச்சி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, மரங்கள் நடப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளில் 1.9 கோடி மரங்கள் இந்திய தேசத்தில் வெட்டப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 19 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதா? இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் பதில் இல்லை. இந்த நிலையில் மரங்களை வளர்க்கும் செயலை செய்வதன் மூலம் காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் தேசத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான காடுகள் தமிழ்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் மற்றும் தனிமனித தேவை ஆகியவை காரணம். காடுகள் அழிவதால் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் சுற்றுச்சூழல் மாற்றத்தை உருவாக்குகிறது. கடல் நீர் அமிலத்தன்மை அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த பத்தாண்டுகளில் 27 சதவீதமாக காடுகளின் பரப்பு 22 சதவீதமாக குறைந்துள்ளது. 1.2 சதவீத அடர் வனம் அழிக்கப்பட்டுள்ளது. 99 ஆயிரம் ஹெக்டேர் வனம் கோவை மாவட்டத்தில் உள்ளது. பத்தாண்டுகளில் தீயினால் 880 ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் ஒரு இலட்சம் மரங்களை 40 நாட்களில் நடப்பட்ட சாதனையை, இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை. தொண்டாமுத்தூர் பகுதியில் சேவை மனப்பான்மையுடன் மரங்கள் நடப்பட்டு இருப்பதற்கு, பாராட்ட வார்த்தைகள் இல்லை. வனங்கள் தான், மரங்கள் தான் எதிர்காலம். மண் மற்றும் மழை வளம் பெற மரம் வேண்டும். இது தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.