பரம்பிக்குளம் அணை கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையானது தமிழக முதல்வராக இருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்டது. கேரள மாநிலத்திற்குள் இந்த அணை அமைந்திருந்தாலும், இதன் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு கவனித்துக் கொண்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வரும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் இந்த அணை முக்கிய பங்காற்றி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக மழை பெய்யும் இடமான சோலையார் அணையின் உபரிநீர், சேடல்டேம் வழியாக சென்று தூணக்கடவு வழியாக சென்று பரம்பிக்குளம் அணைக்கு சென்று சேருகிறது. 71 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, கேரளாவில் உள்ள சாலக்குடி ஆற்றுக்கு சென்று கடலில் கலக்கிறது. இந்த அணையில் மூன்று மதகுகள் உள்ளன. இவை 20,750 கன அடி நீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அணையில் உள்ள மூன்று ஷட்டர்களில் நடுவில் இருந்த ஒரு ஷட்டர் சேதமடைந்தது.இதன் காரணமாக அம்மதகில் இருந்து அதிகளவிலான தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணி துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததனர். இதன் பேரில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முனராய் ஜோஷி மற்றும் தமிழக, கேரளா பொது பணித் துறை அதிகாரிகள் தற்போது அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரை கட்டுபடுத்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலக்குடி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “மதகில் இருந்து வெளியேறும் நீரால் சாலக்குடி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படவில்லை. சமமட்ட கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு நடைபெறும் பாசனப் பணிகளுக்கு பாதிப்பு இல்லை. சேதமான மதகு வழியாக முழுமையாக நீர் வடிந்த பின் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அணையில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பரம்பிக்குளம் அணையின் மதகு சேதமடைந்ததை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன்,“பரம்பிக்குளத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு மிகவும் வருத்தத்திற்குரியது. எதிர்பாராமல் ஷட்டர்களை ஏற்றி இறக்க உதவும் தானியங்கி கழன்று விழுந்ததால், ஷட்டர் பழுதடைந்து விட்டது. அணையில் இருக்கும் தண்ணீர் கட்டுக்கடங்காமல் வெளியேறி வருகிறது. இப்படிப்பட்ட விவரீதம் வேறு எங்கும் ஏற்பட்டதில்லை.
தானியங்கி அதிக எடையுடன் விழுந்ததால் கதவுகள் நொறுங்கி போய்விட்டது. தற்போது 17 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் வெளியேறி வரும் காட்சியை பார்க்கையில் எனது மனம் வேதனையில் துடித்தது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் அடுத்துள்ள சிறு அணையில் தாங்காது. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் சாலக்குடி ஆற்றில் கலந்து கடலுக்குச் செல்லும். 6 டி.எம்.சி தண்ணீர் வீணாகும். மதகில் உள்ள நீர் வடிந்த பிறகு தான் வேலை செய்ய முடியும்.
முதலமைச்சருடன் கலந்து பேசி போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மதகுகள் பழுது பார்க்கப்படும்.. திருமூர்த்தி அணைக்கு செல்லும் தண்ணீரில் பாதிப்பில்லை. இதனால் பாசனத் பணிகளுக்கு பாதிப்பில்லை. இந்த அணை விவகாரத்தில் இரு மாநிலங்கள் இணைந்து தான் பணியாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்