பொங்கல் பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கவில்லை என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளான மண்ணூர், ராமநாதபுரம், ராமபட்டினம் போன்ற இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் அதிமுகவின் பூத் கமிட்டிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசணை வழங்கினார். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.


அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றிய போது, இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று என்ற கொடிய நோய் பரவி இருந்தது. அந்த சமயங்களில் பத்திரப்பதிவு வருமானம், சாலை போக்குவரத்து வருமானம், ஜி,எஸ்,டி வருமானம் ஆகியவை குறைந்து இருந்தது. தமிழக அரசு அந்த சூழ்நிலையும் 2019 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு நலத்திட்ட பணிகளை சிறப்பாக வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று, கஜா புயல், வர்தா புயல் ஆகியவை தாக்கியதால் கடுமையான சூழல் இருந்தது. அத்தகைய சூழ்நிலையிலும் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு பரிசுத்தொகுப்பு உடன் 2000 ரூபாய் மற்றும் 2500 ரூபாயை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


ஆனால் இப்பொழுது விடிய திமுக அரசின் ஆட்சி காலத்தில் மதுபான விற்பனை, பத்திரப்பதிவு துறை வருமானம், சாலை போக்குவரத்து வருமானம், ஜி.எஸ்.டி வருமானம் ஆகியவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதிக வருவாய் உள்ள நிலையிலும் தமிழக மக்களுக்கு இதுவரை பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு எந்த ஒரு பரிசுத்தொகுப்பையும் விடியா திமுக அறிவிக்கவில்லை. தமிழக மக்களுக்கு எந்த ஒரு நல்ல பயனையும் இந்த விடிய தி.மு.க அரசு வழங்கவில்லை. பொங்கலுக்கு இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில் இந்த விடிய திமுக அரசு மக்களுக்கு எந்த ஒரு பொங்கல் தொகுப்பை பற்றி அறிவிப்பு கொடுக்கவில்லை. மேலும் தற்போது வழங்குகின்ற புயல் நிவாரணம் அனைத்தும் ஆளுங்கட்சிக்காரர்களிடமே சென்றடைகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்வதில்லை.  இதற்கெல்லாம் கூடிய விரைவில் தமிழக மக்கள் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.