கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் ; காவல் துறையினர் சோதனையால் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அல்வேர்னியா என்ற தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

கோவை ராமநாதபுரம் பகுதியில் அல்வேர்னியா மெட்ரிக் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், காலை நேரங்களில் தேர்வுகளும், மதிய நேரங்களில் மற்ற மாணவிகளுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 11 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனிடையே அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.


இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு இல்லை என்பதும், பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனால் காவல் துறையினரும், பள்ளி நிர்வாகத்தினரும் நிம்மதி அடைந்தனர். தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மதியத்திற்கு பிறகு மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டன. காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினரிடம் கேட்ட போது, ”வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பள்ளி வளாகத்தில் சோதனை செய்தோம். அதில் அந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. யாரும் அச்சப்பட தேவையில்லை” எனத் தெரிவித்தனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளி முன்பாக திரண்டனர். அப்போது எங்களது குழந்தைகளின் பாதுகாப்பே முக்கியம் என்பதால், குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி, பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பதால் அச்சப்பட தேவையில்லை என சமாதானப்படுத்தினர். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement