கோவை அருகே சுல்தான்பேட்டை பகுதியில் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். 34 வயதான இவர் வீட்டிலேயே கைத்தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பல்லடம் நோக்கி சுந்தர்ராஜ் சென்றுள்ளார். அவ்வழியில் உள்ள ஜெ கிருஷ்ணாபுரம் பகுதியில், காமநாய்க்கன்பாளையம் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற சுந்தர்ராஜை, காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 கேன்களில் கள்ளச் சாராயம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுந்தர்ராஜிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் சாராயம் காய்ச்சி ஒப்புக் கொண்டார். இதையடுத்து காமநாய்க்கன்பாளையம் காவல் துறையினர், சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் சென்று கள்ளச் சாராயத்தை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் 75 லிட்டர் சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுந்தர்ராஜை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் இருந்த கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 76 நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் மதுப் பிரியர்கள் செய்வதறியாது தவித்தனர். அப்போது பல இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது நடந்து வந்தது. சிலர் வீடுகளிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, யூ டியூப் பார்த்து கள்ளச் சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். பின்னர் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் என்பது வெகுவாக குறைந்து விட்டது.