கோவையில் மனநலம் பாதிப்புடன் சுற்றி திரிந்த வட மாநில இளைஞரை தன்னார்வ அமைப்பினர் மீட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் என்ற தன்னார்வ அமைப்பு மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றி திரியும் ஆதவற்ற நபர்களை மீட்டு, சிகிச்சையளித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 700 பேர் கோவையில் மீட்கப்பட்டு சிகிச்சையளித்து பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனக்கு தானே பேசியவாறு, சாலையில் மோசமான நிலையில் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞர் ஒருவரை இவ்வமைப்பினர் மீட்டனர். அவருக்கு உணவு, உடைகள் வழங்கி, மன தத்துவ நிபுணர்கள், மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்து வந்தனர்.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் அவர் குணமடைந்த நிலையில், அவருக்கு பழைய நினைவுகள் வந்துள்ளது. அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கோபால் நிஷாத் என்பவரது மகன் ஜித்தேந்தர் (34) எனக் கூறியுள்ளார். இதையடுத்து தன்னார்வ அமைப்பினர் ஜித்தேந்தர் கூறிய அடையாளங்களை வைத்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அழைத்து பேசிய போது, ஜித்தேந்தர் சகோததரர் அம்மாநில காவல் துறையில் பணியாற்றி வருவது தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஜிதேந்தர் அவரது சகோதரர் தான் என்பது உறுதியானது.
கடந்த 2015 ம் ஆண்டு வீட்டில் இருந்து ஜித்தேந்தர் மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தேடி வந்தனர். ஒரு கட்டத்தில் அவர் உயிரோடு இருக்க மாட்டர் என உறவினர்கள் எண்ணிய நிலையில், தற்போது அவர் கோவையில் மீட்கப்பட்டு, உடல் நலத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த ஜித்தேந்தரை சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அழைத்து செல்ல வந்த அவரது சகோதரர் தேவேந்திர நிஷாத் தனது சகோதரரை கண்டதும் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து அவர் எடுத்து வந்த ஆவணங்களை ஒப்படைத்த பின் ஜித்தேந்தரை அவரது அண்ணணிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் ஜித்தேந்தர் தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அவரது அண்ணனுடன் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்