தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல்.18) மாலை கோவை வர உள்ளார். இதையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்ற உள்ளார்.

Continues below advertisement

பிரதமர் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்ட மேடையை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் கண்ணன், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை காவல் ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

கூட்டத்தில் பிரதமர் பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், பொதுமக்கள் நுழைவு மற்றும் வெளியேற்றம், அவசர கால மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.